இராமநாதபுரம்: கமுதி அருகே திங்கள்கிழமை விவசாய நிலத்தில் ஆடு மேய்ந்ததால், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், இரு பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். கமுதி அருகே ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் முனியசாமி(18). இவர் தனது ஆடுகளை தரிசு நிலங்களில் மேய்ச்சலில் ஈடுபடுத்தியிருந்தார். அப்போது முனியசாமியின் ஆடுகள், அருகிலுள்ள அதே ஊரைச் சேர்ந்த பாண்டியின் நிலத்தில் மேய்ந்து, பருத்திச் செடிகளை சேதப்படுத்தியது.
இதனால் ஆத்திரமடைந்த பாண்டி, இவரது மகன் ஆனந்த்(23) இருவரும், முனியசாமியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.தகவலறிந்த இருதரப்பினரும், அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றால் தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பிலும் மாரிச்சாமி (40), பாண்டி, இவரது மகன் ஆனந்த்(23), காந்தி மகன்கள் பவுன்ராஜ் (25), சிவன்ராஜ், ஞானகுரு (41), திருமால் (45), முருகவேல் (45), செல்வராணி (45), மகாராஜா மனைவி செல்வி (22), முத்துக்குமார் (46), முனியாண்டி (47), வேலு (70), நாகராஜ் மகன் முத்துசெல்வம் (17), செல்வம் மகன் முனியசாமி (18), உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த விவசாயி திருமால், கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இதுகுறித்து முதுகுளத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஸ்(பொறுப்பு), ஆய்வாளர்கள் கஜேந்திரன்(கமுதி), லட்சுமி(அபிராமம்), சார்பு -ஆய்வாளர்கள் முருகநாதன், கவிதா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, இரு தரப்பிலும் மொத்தம் 15 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்