இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் அருகே உள்ள மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காவல்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் மாணவர்களுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட்களை வழங்கி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்தார் முன்னதாக தனியார் மண்டபத்தில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தான விழிப்புணர்வு குழு நாடகம் கவிதை பேச்சுப் போட்டிகள் உள்ளிட்டவை மாணவ/மாணவிகள் நடத்திக் காட்டினார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,“போதைப் பொருட்கள் சமுதாயத்தை சீர்கெடுக்கக்கூடியவை. இவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் காவல்துறை சார்பில் நடத்தப்படுகின்றன.
எனவே, மாணவர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் யாராக இருந்தாலும் போதைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும். போதைப் பொருட்கள் உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்கின்றன; அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன,” என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுமார் 250 மாணவி–மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கைப்பந்து, கூடைப்பந்து மற்றும் இறகுபந்து ஆகிய ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகைகள் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.1000 மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இமயவரம்பன் (இராணிப்பேட்டை உட்கோட்டம்), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.