உடலில் இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத_உணவுகள்!!!
எப்படி வண்டி ஓடுவதற்கு பெட்ரோல், டீசல் போன்றவை முக்கியமோ, அதேப்போல் உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும்.
இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டால் நகங்கள் மற்றும் சருமம் வெளுத்துப் போய் இருப்பதோடு, அதிகப்படியான சோர்வு, இரத்த அழுத்த குறைவு, தலைவலி, மூச்சுத்திணறல், கவனச்சிதறல் போன்ற பல அறிகுறிகள் தென்படும். இரத்த சோகையானது இரும்புச்சத்து குறைபாடு, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, வைட்டமின் பி12 குறைபாடு போன்றவற்றால் ஏற்படும். மேலும் இது முற்றினால், நரம்பு பாதிப்பு ஏற்படும். ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம். இங்கு உடலில் உள்ள இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து வாருங்கள்.
கருப்பு எள்ளு : இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.
பேரிச்சம் பழம் : பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இரவில் 2-3 பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வருவது நல்லது.
ஆப்பிள் : ஆப்பிளில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. அத்தகைய ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை நீங்கும்.
வாழைப்பழம் : வாழைப்பழத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி, இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இரத்த சோகை மட்டுமின்றி, வேறு சில நன்மைகளும் கிடைக்கும்.
உலர் திராட்சை : உலர் திராட்சையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
பீட்ரூட் : பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த ஊறும் என்று சொல்வார்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
வெல்லம் : வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரைக்கு பதிலாக, டீ போன்ற பானங்களில் வெல்லத்தை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். தேன் தேனில் இரும்புச்சத்து மற்றும் இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து கலந்து, குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
நெல்லிக்காய் : தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். பார்ஸ்லி பார்ஸ்லியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் வளமையாக நிறைந்துள்ளது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள். இதில் வைட்டமின் சி மற்றும் இதர வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், இவை இரத்தம் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும்.
சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சையில், இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி வளமையாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
மாதுளை : மாதுளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் மற்ற கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும்.
தக்காளி : தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபைன் போன்றவை வளமையாக நிறைந்துள்ளது. இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால் மட்டும் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியாது, இரும்புச்சத்தை உறிஞ்சும் வைட்டமின் சி நிறைந்த உணவையும் சேர்த்து வந்தால் தான் இரத்தத்தின் அளவு அதிகரிக்க முடியும்.
ஆட்டு ஈரல் : ஆட்டு ஈரலில் இரும்புச்சத்து, வைட்டமின் பி12, ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை அதிகம் உள்ளது. எனவே வாரம் ஒருமுறை ஆட்டு ஈரலை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், இரத்தத்தின் அளவை அதிகரித்து, இரத்த சோகையைப் போக்கலாம்.
பச்சை இலைக் காய்கறிகள் : பச்சை இலைக் காய்கறிகளான பசலை கீரை, அரைக்கீரை, சிறு கீரை போன்றவற்றை டயட்டில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து நிவாரணம் பெறலாம்.