சென்னை : சென்னையை அடுத்த பல்லாவரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் என்ற பிரவின்குமார்(வயது 22). இவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரும், ஈசா பல்லாவரத்தை சேர்ந்த தீபிகா(19) என்ற பெண்ணும் 2 ஆண்டுகளாக காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த மே மாதம் 8-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்
பின்னர் பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து இருவரும் பிரவின்குமார் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் ஆடி மாதம் என்பதால் கடந்த 20-ந் தேதி தீபிகாவை அவரது தாய் வீட்டில் கொண்டு சென்றுவிட்டார். 10 நாட்களாக தாய் வீட்டில் இருந்த தீபிகா, 30-ந் தேதி வீட்டின் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
பல்லாவரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி பெண்ணின் தந்தை சந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லாவரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி வந்தார். திருமணம் ஆகி இரண்டரை மாதங்களில் தீபிகா இறந்ததால் இதுபற்றி தாம்பரம் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது..
இது தொடர்பாக போலீசார், பிரவின் குமாரிடம் விசாரணை நடத்தியபோது, காதல் மனைவி தீபிகா என்னிடம் அன்பாக இருந்தார். அவரது தாய் வீட்டுக்கு சென்றபிறகு அங்கு இருந்து எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். வேலையாக இருந்ததால் போனை எடுக்காததால் போன் செய்யும்படி எஸ்.எம்.எஸ். அனுப்பினார். ஆனால் நான் வேலையில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை. அந்த கோபத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.”..
மனைவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அவர் முயன்றார். ஆனால் பெண் வீட்டு தரப்பில் கோபமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறிய போலீசார், திங்கட்கிழமை(இன்று) காலை கோட்டாட்சியர் விசாரணைக்கு வருமாறு அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் மனைவி இறந்த சோகம் தாங்காமல் பிரவின்குமார், நேற்று குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதல் திருமணம் செய்த தம்பதிகள், அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.