மதுரை நவ 1 கையில் வாளுடன் நடுரோட்டில் தகராறு செய்து தட்டி கேட்ட ஆட்டோ டிரைவரை தாக்கி கண்ணாடியை உடைத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மெகாபூப் பாளையம் அன்சாரி நகர் 5வது தெரு முகமது ஹவுஸ் மகன் ஹக்கீம்செரீப்39. இவர் ஆட்டோ டிரைவராவார்.சம்பவத்தன்று அருந்ததியர் தெருவில் ஆட்டோ ஓட்டிச்சென்றார். அப்போது நடு ரோட்டில் கையில் வாளுடன் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவாறு ஆபாசமாக பேசி மூன்று பேர் கூச்சலிட்டபடி நின்றனர். அவர்களை ஆட்டோ டிரைவர் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மூவரும் ஹக்கீம்செரிப்பை தாக்கி ஆட்டோ கண்ணாடியையும் உடைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஹக்கீம்ஷெரீப் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வைத்தியநாத புரத்தை சேர்ந்த சாதிக் பாஷா மகன் அப்துல் மாலிக், அந்தோணி மகன் வேளாங்கண்ணி, மகேஸ்வரன் மகன் முத்துப்பாண்டி மூவரையும் கைது செய்தனர்.
தெற்கு வாசல் மீன் மார்க்கெட் அருகே ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் ஒருவர் கைது .
மதுரை நவ 1 தெற்கு வாசல் மீன் மார்க்கெட் அருகே முன் விரோதத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர் .
தெற்குவெளி வீதி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் 30. இவர் ஆட்டோ டிரைவராவார். இவருக்கும் காஜா தெருவை சேர்ந்த அப்துல்ஜெரிப்42 இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் தெற்கு வாசல் மீன் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்த சரவணக்குமாரை வழிமறித்து அப்துல் ஷரீப் சரமாரியாக தாக்கி உள்ளார். இந்த சம்பவம் குறித்து சரவணகுமார் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய அப்துல்செரிபை கைது செய்தனர்.
மேல வாசலில் எட்டாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை காரணம் என்ன போலீஸ் விசாரணை
மதுரை.நவ.1 மேல வாசலில் எட்டாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காரணம் என்ன என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர் மகள் மணிமேகலை 13 .இவர் அந்தப்பகுதியில் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்தாய். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் அப்பா சங்கர் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே புதூரில் இரண்டாவது மாடியில் தவறி விழுந்த வாய் பேச முடியாத சிறுவன் பலி .
மதுரை நவ 1 .கே.புதூரில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த வாய் பேச முடியாத சிறுவன் பலியானான். கே. புதூர் கண்ணணேந்தல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் ஜெயதர்ஷன் 10. இவனால் வாய் பேச முடியாது. இந்த நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து சிறுவன் தவறி விழுந்து படுகாயம் அடைந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவனை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஜெயதர்சன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து தந்தை முருகன் கொடுத்த புகாரில் திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸில் வாலிபர் மர்ம சாவு போலீஸ் விசாரணை
மதுரை நவ ஒன்று மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலூர் எஸ் .கல்லம்பட்டி புதூரை சேர்ந்தவர் அயூப்கான் மகன் ஷேக்தாவூத்35 .இவர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பிளாட்பாரம் நம்பர் நான்கில் நின்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த தகவல் அறிந்த மாட்டுத்தாவணி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை அயூப்கான் கொடுத்த புகாரில் மாட்டுத்தாவனி போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் தாவூதின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் நாய் கொடூரமாக அடித்துக் கொலை போலீஸ் விசாரணை .
மதுரை நவ ஒன்று திருப்பரங்குன்றத்தில் நாய் ஒன்றை கொடூரமாக அடித்துக் கொன்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பரங்குன்றம் புதுக்குளத்தில் நாய் ஒன்று மர்ம நபர்களால் கொடூரமாக அடுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது.
இந்த சம்பவம் குறித்து பைக்காரா அழகு சுந்தரம் நகர் சூரியராவ் மகன் குஸ்மா 30 என்பவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து நாயை கொடூர கொலை செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையில் அதி வேகமாக ஆபத்தை ஏற்படுத்து விதமாக வாகன ஒட்டிய 27 வாகனங்கள் பறிமுதல் போலீஸ் அதிரடி .
மதுரை நவ ஒன்று மதுரையில் பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக அதிவேகமாக ஓட்டிய 27 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை செல்லூர் பகுதியில் சம்பவத்தன்று அதிவேகமாக பொது மக்களுக்கு இடையூறு செய்யும்படி சிலர் கூச்சல் போட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர் .அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த செல்லூர் போலீசார் மொத்தம் 27 வாகனங்களை தடுத்து நிறுத்தி அவற்றை பறிமுதல் செய்தனர்.
காமராஜர் சாலையில் பேசிவிட்டு தருவதாக கூறி செல்போன் பறிப்பு ஒருவர் கைது .
மதுரை நவ1 காமராஜர் சாலையில் பேசிவிட்டு தருவதாக கூறி செல்போன் பறித்துச் சென்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஹஜ்மதுரை காஜா தெருவை சேர்ந்தவர் அப்துல் ஷெரீப் 42 .இவர் காமராஜர் சாலை அரசமரம் பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார் .அப்போது ஓபுலா படித்துறை இஸ்மாயில்புரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மருதமுத்து மகன் மாரிமுத்து 33 என்பவர் செல்போனை பேசிவிட்டு தருவதாக கூறி அப்துல்ஷெரிப்பிடமிருந்து வாங்கிக்கொண்டு பேசுவது போல் நடித்து ஓடமுயன்றார்.அவரை பிடித்து விளக்குத்தூண் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் பறித்த மாரியப்பனை கைது செய்தனர்.
எஸ் எஸ் காலனி தென்னந்தோப்பில் கஞ்சா விற்பனை நான்கு பேர் கைது .
மதுரை நவ1. எஸ் எஸ் காலனி தென்னந்தோப்பில் கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். எஸ் எஸ் காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் .இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் .அப்போது அங்குள்ள தென்னந்தோப்பு ஒன்றில் கஞ்சா விற்பனை செய்வதாக அவருக்கு தகவல் கிடைத்தது .அவர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்தவர்களை சுற்றி வளைத்து நான்கு பேரை பிடித்தார். அவர்களிடம் சோதனை நடத்தினார். அவர்கள் ஒரு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது .அவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்தார். விசாரணையில் அவர்கள் அங்கே கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை இடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பொன்மேனி முதல் தெரு காளிதாஸ் மகன் கருப்பையா என்ற வழுக்கை கருப்பையா 25, சிக்கந்தர் சாவடி பால் சாமி மகன் அஜித் குமார் என்ற ஆக்கு 25, நாராயணன்தெரு ராஜா மகன் சூர்யா என்ற மாக்கன் சூர்யா 21 ,பொன்மேனி கிழக்கு தெரு ராமமூர்த்தி மகன் காட்டு ராஜா 20 என்று தெரியவந்தது அவர்களை கைது செய்தார்.
அலங்காநல்லூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷமருந்தி தற்கொலை
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (40). விவசாய கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி தானலட்சுமி (38). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஹரிகிருஷ்ணன் (14) அருகிலுள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பும், குபேந்திரகிருஷ்ணன் (12). ஏழாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து , வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி நேற்று இரவு கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது இரு மகன்களுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். நள்ளிரவில் வீட்டிற்கு வந்த அய்யனார் கதவை தட்டிய போது யாரும் திறக்காதால் சந்தேகம் அடைந்தவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மூன்று பேரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அய்யனார் மீதம் இருந்த விஷத்தை தானுமருந்து தற்கொலைக்கு முயன்றார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அய்யனார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி