சென்னை: அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தமிழகத்திலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இன்று முதல் அரசின் மறுஉத்தரவு வரும் வரையில் மூடப்படுகின்றன. உடற்பயிற்சிக்கூடங்கள், கேளிக்கைக்கூடங்கள், மதுபான பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகளும் அடைக்கப்படுகின்றன. பெரிய கடைகள், வணிக வளாகங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை தற்போது புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு ‘இ-பதிவு’ முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு விமானம், கப்பல் மூலம் வரும் பயணிகளுக்கும் ‘இ-பதிவு’ கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஊடகம், பத்திரிகை உள்பட அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மறுஉத்தரவு வரும் வரையில் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். கொரோனா தடுப்பு நடவடிகைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், புதிய கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.