மதுரை :இறந்தோரை என்றும் மறந்தார் இல்லை என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ம் நாளை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் இன்று கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களில் மரித்த மூதாதையர்கள், பெற்றோர்கள். உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் நண்பர்கள் என அனைவரது கல்லறைகளுக்கும் சென்று அஞ்சலி செலுத்தி வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அவர்களின் கல்லறைகளுக்கு சென்று சுத்தம் செய்து வண்ணம் பூசி தயார் நிலைப்படுத்தி இன்றைய நாளில் மலர்கள், தீபங்கள் தூபங்கள் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றார். மேலும் இன்றைய நாளில் இறந்தவர்களின் நினைவாக அனைத்து ஆலயங்களிலும் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகின்றது.
கல்லறைகளிலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு அருட்தந்தையர்கள் கல்லறைகளை மந்திரிக்கும் நிகழ்வும் நடைபெறும். மதுரையில் கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்திற்குட்பட்ட கல்லறையில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி அவர்கள் காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நிறைவேற்றி கல்லறையை மந்திரித்து வைக்கிறார். மற்றும் மதுரையில் கத்தோலிக்க திருச்சபைகளுக்கு உட்பட்ட மஹபூப்பாளையம், கல்லறை, துவரிமான் கல்லறை, தத்தனேரி கல்லறை இவை அனைத்திலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. மஹபூப்பாளையம் கல்லறையில் காலை 9 மணிக்கும், துவரிமான் கல்லறையில் மாலை 4 மணிக்கு ஞான ஒளிபுரம் புனித வளனார் ஆலய பங்கு தந்தை ஜோசப் அவர்கள், திருப்பலி நிறைவேற்றி கல்லறையை மந்திரித்து வைக்கின்றார். இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ம் நாள் கல்லறை திருநாள் இறந்தவர்களை நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவர்களால் சிறப்பிக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. ஆண்டனி வினோத்