சென்னை : 51 வயதாகும் சரவணன் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது அன்றாட பணிகளுக்கு இன்னமும் சைக்கிளைத்தான் பயன்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக என்னால் ஃபிட்டாக இருக்க முடிகிறது. இன்னமும் எனக்குத் தொப்பை இல்லை. மேலும் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களும் எனக்கு இல்லை. இதற்கு நான் சைக்கிள் ஓட்டுவதே காரணம்’ என்றார்.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள தலைமைக் காவலர் சரவணனின் வீடு ஆதம்பாக்கத்தில் இருக்கிறது.
அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர் தினமும் சைக்கிளில்தான் வருகிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுகிறேன். அலுவல் சம்பந்தமாகக்கூட, நான் பைக்கை பயன்படுத்துவது கிடையாது. நான் சைக்கிள் ஓட்டுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தாங்களும் இதே போல முழு நேரமும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்கிற ஆசை இருப்பதாகப் பலரும் என்னிடம் தெரிவிக்கின்றனர். சைக்கிள் ஓட்டுவதன் மூலம் இரவில் நல்ல உறக்கத்தைப் பெற முடிகிறது. அத்துடன் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் எனக்கு இல்லை. மேலும் சைக்கிள் பயணம் சுற்றுச்சூழலைப் பாதிக்காது’ என்று விவரிக்கிறார்.