ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி ஷாலு தேவி. கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி ஷாலு தனது உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ஜெய்ப்பூர்-சிகார் சாலையில் உள்ள ஹர்மடா அருகே எஸ்.யூ.வி வாகனம் ஒன்று அவர்களை மோதிவிட்டு வேகமாகச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே ஷாலு தேவி மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து, காவல்துறை இதை விபத்தாகப் பதிவுசெய்து வழக்கை விசாரித்துவந்தது. இந்த நிலையில் விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மனைவி ஷாலு தேவி இறந்தவுடனே முதல் நபராக இன்ஷூரன்ஸ் பணத்தைக் கேட்டுப் பெற்றிருக்கிறார் மகேஷ் சந்த். இதனால் காவல்துறைக்குச் சந்தேகம் வந்து, விசாரணையின் கோணத்தை மாற்றியுள்ளனர். அதன் பிறகே இது விபத்து அல்ல என்றும் திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என்றும் போலீசாருக்கு தெரிய வந்தது. விசாரணையின் போது, தன் மனைவியை இன்ஷூரன்ஸ் பணத்துக்காகத் திட்டமிட்டு கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இது குறித்து மகேஷ் சந்திரா, திருமணத்தின்போது என் மனைவியின் பெற்றோர் தருவதாகக் கூறிய வரதட்சணையைக் கொடுக்கவில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தது. ஒருகட்டத்தில் அவளைக் கொலை செய்ய முடிவு செய்தேன் எனத் தெரிவித்தார். இந்நிலையில் கணவன் மகேஷ் சாந்த் மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் 4 பேரையும் காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.