திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டு பிடிக்கும் பொருட்டு புதிதாக FACETAGR செயலி தென்மண்டலத்தில் முதலாவதாகவும், தமிழகத்தில் இரண்டாவதாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் 24 மணி நேரமும் காவல்துறையினர் ரோந்து பணியில் இருக்கும் போது சந்தேக நபர்களை கைப்பேசியில் புகைப்படம் பிடித்து ஒப்பிடும்போது அவர்கள் மீதுள்ள வழக்குகள் பற்றிய விபரம் அதே இடத்தில் தெரியவரும். இந்த செயலியின் மூலம் பழங்குற்றவாளிகளின் பழைய புகைப்படங்கள் இருந்தாலும் கூட எளிதாக கண்டுபிடிக்க இயலும். இந்த செயலி மூலம் புகைப்படம் எடுக்கப்பட்ட நபர் குற்றவாளியள்ளாதவராக இருப்பின் அதே இடத்திலேயே விடுவிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இன்று (30.11.2020) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப. அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் மற்றும் திண்டுக்கல் ஊரக உட்கோட்டத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் 60 நபர்களுக்கு மேற்படி செயலி குறித்து பயிற்சி வகுப்பு துவக்கி வைத்தார்கள். இந்த பயிற்சி வகுப்பின் போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இனிகோ திவ்யன் அவர்களும் மற்றும் ஊரக உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்களும் உடன் இருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
