டெல்லி: டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் திடீர் போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் நீதிமன்றம் போர்க்களமானது. வழக்கறிஞர்கள் தொடர் மோதல் போக்கில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஐ.டீ.ஓ பகுதியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை சீருடையுடன் போலீசார் முற்றுகையிட்டனர். கருப்பு ரிப்பன்களை அவர்கள் கட்டி இருந்தனர்.
நாடு சுதந்திரம் அடைந்து இந்தியாவில் முதன்முறையாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட நேரில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.