இதய நோய் : இதய நோய் பாதிப்புகளால் ஒவ்வோர் ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் உலக அளவில் தங்கள் இன்னுயிரை இழப்பதாகச் சொல்கிறது. உலக சுகாதார மையத்தின் தரவுகள் இதில் ஐந்தில் ஒரு பங்கு உயிரிழப்பு இந்தியாவில் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை பயன்பாடு மற்றும் குடிப்பழக்கம் மாதிரியானவை இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழப்பு ஏற்படுவதையும் செய்திகளில் அவ்வப்போது பார்க்கிறோம். இந்த சூழலில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர் தென்படும் எட்டு அறிகுறிகள் குறித்து ஒரு ஆய்வு கட்டுரையில் பகிரப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட போகிறது என்றால் குறைந்தபட்சம் சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்னரே உடலின் இயக்கத்தில் இந்த எட்டு விதமான அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்படும் என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து ஆய்வு கட்டுரையின் ஊடாக தெரிவித்துள்ளனர்.
சோர்வு : உடலில் ஏற்படும் அசாதாரண சோர்வு ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் உழைப்பு மற்றும் மன குழப்பத்தினால் ஏற்படும் சோர்விற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் நபருக்கு ஒவ்வொரு நாளின் இறுதியிலும் அதிகளவில் சோர்வாக காணப்படுவார்கள் என சொல்லப்பட்டுள்ளது. அப்படி சோர்வு ஏற்படும் போதெல்லாம் குட்டி தூக்கம் போடுவது, குளிப்பது மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிவித்துள்ளனர். ஒருவரின் உடலில் உள்ள சோர்வை போக்குவதன் மூலம் மாரடைப்பை தடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
அடி வயிற்று வலி : வயிற்று குமட்டல், வயிற்று பகுதியில் ஏற்படுகின்ற திடீர் வீக்கம், அடி வயிற்று வலி அல்லது வயிற்று பகுதி முழுவதும் வலி போன்றவை ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சில மணி நேரங்களுக்கு மேல் இந்த வயிற்று வலி இருந்தால் மருத்துவரை அணுகுவது தான் தீர்வாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
மூச்சு திணறல் : ஒருவர் மூச்சு விடுவதிலும், சுவாசிப்பதிலும் சிரமப்பட்டால் அவருக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கும் என தெரிவித்துள்ளனர். ஆண், பெண் அனைவரிடத்திலும் இந்த அறிகுறி தெரியும். இந்த அறிகுறியின் மூலம் சுமார் ஆறு மாதத்திற்கு முன்னரே ஒருவருக்கு மாரடைப்பு வரவுள்ளதை அறிகுறியாக அறிந்து கொள்ள முடியுமாம். தலைசுற்றல், சுவாசிக்க போதுமான காற்று இல்லாதது போன்ற அறிகுறிகள் மூலமாகவும் ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
தூக்கமின்மை (இன்சோம்னியா) : தூங்குவதற்கு சிரமப்படுவது, தூக்கத்திலிருந்து திடீரென விழிப்பது, விடியற் காலையில் விழிப்பது போன்றவை தூக்கமின்மை நோயின் அறிகுறி. தொடர்ச்சியாக ஒருவர் தூங்க சிரமப்பட்டால் அவருக்கு மாரடைப்பு வர அதுவே காரணமாக அமைகிறது. ஒருவர் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட மனக்கவலையை விடுத்து இருக்க முயற்சிக்க வேண்டும். அப்படி செய்ய முடியவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
முடி உதிர்தல் : மாரடைப்பு ஏற்படுவதற்கான வெளிப்படையான அறிகுறியாக முடி உதிர்தல் கருதப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹார்மோன் கோளாறுகளால் ஒருவருக்கு வழுக்கை விழுந்தாலும் அது மாரடைப்போடு தொடர்பு இருக்கலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக வியர்த்தல் : மன சோர்வு, பதட்டம் முதலிய காரணங்களால் ஒருவருக்கு அதிகமாக வியர்வை வெளியேறினால் அது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.