கடைகளில் கொள்ளை
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனியார் டி.வி டிஷ் சர்வீஸ் சென்டரில் நேற்று காலை கதவை உடைத்து அங்கிருந்த எல்.இ.டி டிவி, லேப்டாப் ஆகிவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதேபோல் ஆவடி கன்னிகாபுரம் காந்தி தெருவில் உள்ள கடையின் ஷெட்டரை உடைத்து 300 பால் பவுடர் பாக்கெட்கள், ஐஸ் கிரீம் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதேபோல், திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகர் 2வது தெருவில் உள்ள மளிகை கடையில் பூட்டை உடைத்து கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.1,500 ரொக்கம் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் ஆவடி, திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சகோதரர்கள் கைது
திருநின்றவூர், மண்டபம் தெருவை சேர்ந்தவர் ஜீவரத்தினம்(22). கடந்த மாதம் 29ந்தேதி பட்டாபிராம் இந்து கல்லூரி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கையில் வைத்திருந்த செல்போனை பறித்து தப்பினர். இதுகுறித்து புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, பாலவேடு நாசிக் நகர் பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாரதி(24) மற்றும் அவரது தம்பி மணிகண்டன்(22) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தல் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 5 சவரன் தங்கச்சங்கிலி, 3 செல்போன்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி, போலீசார் வழக்கு பதிவு
அம்பத்தூர் தொழிற்பேட்டை புளியமரம் பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது. இங்கு காவலாளி கிடையாது. நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மையத்தில் புகுந்து எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாரை தொடர்பு கொண்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனை பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர், போலீசாரும், வங்கி அதிகாரிகளும் உள்ளே சென்று பார்த்தபோது, ஏடிஎம் எந்திரத்தில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், அதில் இருந்த பணத்தை கொள்ளை அடிக்க முடியாமல் மர்ம நபர் தப்பிச்சென்றது தெரியவந்தது.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
K.ஐசக் டேவிட்
திருவள்ளூர் மாவட்ட தலைவர் (சமூக சேவை பிரிவு)
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா