தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் நேற்று (27.06.23), அதிகாலையில் லோடுமேன் ஒருவரிடமும், பெண் ஒருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மூன்று நபர்கள் கொண்ட வழிப்பறி கும்பல் ஓடி விட்டதாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு வந்த புகாரை தொடர்ந்து அந்நபர்களை இனம் கண்டு கைது செய்ய தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஆசிஷ்ராவத் ஐ.பி.எஸ், அவர்கள் உத்தரவிட்டார்கள். அதனை தொடர்ந்து கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார், மற்றும் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்
திரு .அழகேசன், ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை காவல் உதவிஆய்வாளர் திரு.கீர்த்தி வாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, ஜனார்த்தனன், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பி சென்ற மூன்று நபர்களை குறித்து விசாரணை மேற்கொண்டார்கள்.
கும்பகோணம் பெசண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜேஷ் கண்ணன் (23), பாலக்கரை பெருமாண்டி தெருவை சேர்ந்த பூபதி மகன் மகேந்திரன் (23), சத்திரம் கருப்பூர் புது தெருவை சேர்ந்த ஏசுராஜ் மகன் பிரசாந்த் (23), ஆகிய இம்மூன்று நபர்கள் என்று தெரிய வந்ததை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களால் வழிப்பறி செய்யப்பட்ட பணம் , கைப்பை , செல்போன் ஆகியவைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டார்கள், அதில் ராஜேஷ் கண்ணன் என்பவன் (26.06.23), ம் தேதி மாலை தான் கும்பகோணம் கிளை சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான் என்பதும் வெளியே வந்தவுடன் தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து நாச்சியார்கோவில் பகுதியில் ஒரு இடத்தில் பஜாஜ் பல்சர் (இரு சக்கர) வாகனத்தை திருடி கொண்டு வந்து அந்த வண்டியில் வந்து மேற்படி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் , இவ்வழிபறியில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கும் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பகுதி காவல் நிலையங்களில் அடிதடி , வழிபறி, கஞ்சா போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரிய வந்தது அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இம்மூன்று நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்கள். இச்சம்பவம் நடந்த ஆறு மணி நேரத்திற்குள் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை கைது செய்தது குறிப்பிடத்தக்கதாகும் அதிரடியாக இதனை செய்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்