தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் கடகத்தூர் அடுத்த பூசாரிப்பட்டி கிராமத்தில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக தர்மபுரி டி.எஸ்.பி திரு. வினோத், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் தர்மபுரி டவுன் காவல் ஆய்வானர் திரு. நவாஸ், எஸ்.ஐ திரு.சுந்தரமூர்த்தி, மற்றும் தனிப்படை காவல்துறையினர், பூசாரிப்பட்டி கிராமத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாக்கு பையுடன் நின்றிருந்த மூதாட்டியை அழைத்து விசாரித்ததில், சாக்கு பையில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் மேச்சேரி செட்டிகரையூரை சேர்ந்த முருகன் மனைவி பூங்கொடி (65), என்பது தெரியவந்தது. கஞ்சா விற்பனை செய்து வந்த அவரது கணவர் இறந்த பின்னர், அவரது மகன் சந்தோஷ் விற்பனை செய்து வந்துள்ளார். அவரை கடந்த வாரம் மேச்சேரி காவல்துறையினர், கைது செய்தனர். இந்நிலையில் மகனுக்கு உதவியாக இருந்த பூங்கொடியிடம் கஞ்சா கடத்தல் கும்பல் நேற்று 25 கிலோவை கொடுத்தபோது அவரை காவல்துறையினர், கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் உள்ளது. குண்டாஸில் கைதான பூங்கொடி தற்போது தான் வெளியே வந்துள்ளார்.
வந்தவுடன் மீண்டும் கஞ்சா விற்பனையை தொடங்கியுள்ளார். இதையடுத்து அவரிடமிருந்து ஆறு லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சாவை காவல்துறையினர், பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தர்மபுரி டி.எஸ்.பி வினோத், கூறுகையில், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஒரு கும்பல் பூங்கொடியிடம் கஞ்சா கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கடந்த 10 நாட்களாக கண்காணித்து பூங்கொடியை பிடித்துள்ளோம். அவரிடமிருந்து சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த சிறு கஞ்சா வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். தர்மபுரி உட்கோட்டத்தில் மட்டும் 74 சிறு வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ள 12 கிராமங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து போதைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு போதைப் பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். எஸ்பி உத்தரவின் பேரில் இந்த நெட்வொர்க்கை செல்ஃபோன் மூலம் பட்டியல் தயாரித்து கண்காணித்து, தனிப்படையினர் நேற்று 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் என்றார்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.