தூத்துக்குடி : தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் புதிய தானியங்கி (ATM Centre) பண பரிவர்த்தனை மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகம் மில்லர்புரத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்களது குடும்பத்தினரும் அங்குள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். அதே போன்று பொதுமக்களும் அதிகமானோர் அங்கு வசித்து வருகின்றனர். ஆகவே அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படி தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் ஏ.டி.எம் மையம் அமைக்கப்பட்டது.
மேற்படி ஏ.டி.எம் மையத்தை நேற்று (21.07.2020) காலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது ஆயுதப்படை காவலர்களின் கோரிக்கையை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஏற்று விரைவில் அமைய ஏற்பாடு செய்தமைக்கு காவல்துறை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும் ஆயுதப்படை காவலர்கள் இந்த ஏ.டி.எம் மையத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
பின் ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அதனை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விழிப்புணர்வு அறிவுரை வழங்கி, அங்கிருந்த ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார்.
இதில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளை மேலாளார் திரு. ராஜா, மண்டல மேலாளர் திரு. மோகன் ராஜ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன், உதவி ஆய்வாளர்கள் திரு. மணிகண்டன், திரு. சுனை முருகன், திரு. செல்வமுருகன் உட்பட பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.