திருச்சி : திருச்சி காவல்துறையில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் குழந்தைகள் நலன் பேணும் வகையில் திருச்சி மாநகர ஆயுதப்படையில் ‘காவல் நலன் மையத்தை’ போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், நேற்று திறந்து வைத்தார். கொரோனா கால கட்டங்களில் போலீசார் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. காவல்துறையை சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தி, 72 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 30 பேர் திறன் பயிற்சிக்கும், 104 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கும் தகுதி பெற்றனர். இங்கு காவல் நலன் மையம் தொடங்கப்பட்டு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டியூசன் சென்டரும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 125 குழந்தைகள் கலந்து கொண்டனர். பள்ளி செல்லும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் இங்கு பாடத்திட்டங்களை படித்து பயன்பெறும் வகையில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில், ‘இந்த மையத்தில் 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, தினமும் பாடத்திட்டம் மற்றும் செயல் திறனாய்வு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன’ என்றார். நிகழ்ச்சியில் தலைமையக துணை கமிஷனர் சுரேஷ்குமார், ஆயுதப்படை கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் விக்னேஷ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.