விழுப்புரம் : விழுப்புரம் தமிழகம் முழுவதும் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0, கடந்த 12-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை கடந்த 7 நாட்களில் மட்டும் 49 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவும், 30 மில்லி லிட்டர் கஞ்சா ஆயிலும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடியாக கஞ்சா வேட்டை நடத்தினர். இதில் கஞ்சா விற்பனை செய்ததாக திண்டிவனம் அருகே ஆலகிராமத்தை சேர்ந்த பாபு (38), வானூர் அடுத்த பட்டானூரை சேர்ந்த வெங்கடேசன் (35), கண்டாச்சிபுரம் அருகே ஆ.கூடலூரை சேர்ந்த பாபு என்கிற சரவணன் (28) உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.