சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் ஆன்லைன் வங்கி மோசடி தொடர்பான போன் அழைப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டதின் பேரில் சென்னை பெருநகரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வசிப்பிடங்களுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தியாகராயநகர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு.ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப மேற்பார்வையில் தி.நகர் காவல் மாவட்டத்தில் உள்ள மாம்பலம், கோடம்பாக்கம், அசோக்நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர் நகர், வடபழனி, வளசரவாக்கம், ராயலா நகர், தேனாம்பேட்டை, பாண்டிபஜார், தேனாம்பேட்டை ஆகிய 11 காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (12.12.2020) தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களை சந்தித்து, வங்கி மோசடி தொடர்பான போன் அழைப்புகள் வந்தால் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு விபரங்களை தெரிவிக்க கூடாது எனவும், மேலும் OTP, Password போன்றவற்றை வங்கிகள் போனில் கேட்பதில்லை எனவும், அதை எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிரக்கூடாது எனவும், வங்கி சேவை தொடர்பான தேவையில்லாத போன் அழைப்புகளை தவிர்க்குமாறு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
மேலும் பொதுமக்கள் ஆன்லைன் வங்கி மோசடி தொடர்பான புகார்களை, சிறிதும் காலம் தாமதிக்காமல், தி.நகர் காவல் மாவட்ட ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் செயல்படும் சைபர் கிரைம் பிரிவில் கொடுத்து பயனடையும்படியும் கேட்டுக் கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்