சேலம் : சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் மகன் சூரியபிரகாஷ் (20), இவர் தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே மாணவர் சூரியபிரகாஷ் தனது செல்போன் மூலம் அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாடி பொழுதை கழித்து வந்துள்ளார். ஆர்வமாக விளையாடிய ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தனது தந்தை சீனிவாசன் வங்கி கணக்கில் இருந்து 75,000 ரூபாய் பணத்தை சூதாடி தோற்றுள்ளார்.
இந்த நிலையில் மாணவனின் தந்தை சீனிவாசன் நேற்றைய தினம் லோன் கட்டுவதற்காக வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வரும்படி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவன் வங்கியில் பணம் இல்லாதது தெரிய வந்தால் அப்பா திட்டுவார் என பயந்து நேற்றிரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு வீட்டில் உறங்கியுள்ளார். இதனையடுத்து அதிகாலையில் எழுந்த பெற்றோர் மாணவன் சூரியபிரகாஷ் வாந்தி எடுத்து கொண்டிருப்பதை பார்த்துள்ளனர், பின்னர் அவரை ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை அறிந்த ஆத்தூர் ஊரக காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று மாணவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் மாணவன் ஆன்லைன் ரம்மி விளையாட்டி 75,000 ரூபாய் பணத்தை இழந்ததால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவனை மீட்ட காவல்துறையினர், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்