கோவை : பொள்ளாச்சி பணப்பட்டி அருகே சூலூரைச்சேர்ந்தவர்கள் மனோகரன். வேலுச்சாமி. கூலி தொழிலாளியான இவர்கள் இருவரும் பணப்பட்டி அருகே மது அருந்திய போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இருவரும் குடித்தது போலி மதுவா? அல்லது கள்ளச்சாரயமா? என்ற கோணத்தில் நெகமம்காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணையில் மது குடித்து பலியானவர்களில் ஒருவரான மனோகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தோட்டத்தின் ஒரு பகுதியை 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும், அதில் புதிதாக ஒரு ஆட்டோ வாங்கியதும் தெரியவந்தது.காவல்துறையினர் விசாரனையில் நிலத்தை விற்பனை செய்த பணத்தில் சிறிது பணத்தை தனக்குத் தருமாறு சத்தியராஜ் மாமனாரிடம் கேட்டு வந்துள்ளார்.
பலமுறை வலியுறுத்தி கேட்டும் பணத்தைக் கொடுக்க முன்வராததால் ஆத்திரமடைந்த சத்தியராஜ் மாமனாரை கொலை செய்யத்திட்டமிட்டுள்ளார். போலீசில் மாட்டிக் கொள்ளாமல் கொலை செய்வது எப்படி என யோசித்த சத்யராஜ் யூடியூப்பில் வீடியோக்களைப் பார்த்துள்ளார். விஷம் கொடுத்து கொலை செய்யலாம் என முடிவுக்கு வந்தவர், ஆன்லைனில் சயனைடு ஆர்டர் செய்து அதனை மதுவில் கலந்து மாமனாரிடம் கொடுத்துள்ளார். மனோகரனும் தனது நண்பர் வேலுச்சாமியுடன் சேர்ந்து சயனைடு கலந்த மதுவைக் குடித்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஆன்லைனில் சயனைடு எப்படி கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிசாரித்து வருகின்றனர்.
