தர்மபுரி : கடந்த சில தினங்களாக தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே ஆதரவற்ற நிலையில் சாலையோரம் மழை வெயிலில் உடல் நலம் குன்றியிருந்த முதியவரை மீட்டு குளிப்பாட்டி ஆடைகள் வழங்கி முதியோர் காப்பகத்தில் சேர்க்க உதவி செய்த அப்பகுதி தன்னார்வலர்கள் மற்றும் பணியில் உள்ள நல்ல உள்ளம் படைத்த காவல் துறையினர். கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையில் நனைந்து உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு முதியவர் நடமாட முடியாத நிலையில் சாலையோரம் உடல் நலம் குன்றிய நிலையில் இருந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு உணவு கொடுத்தனர். இருந்தபோதிலும் மனநலம் குன்றிய அவர் மீண்டும் மீண்டும் சாலையோரம் தவழ்ந்த நிலையில் படுத்துக் கிடந்தார். அவரை மீட்டு முதியோர் காப்பகத்தில் சேர்க்க பல்வேறு ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொண்டு முயற்சி செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து எடுத்த முயற்சியின் விளைவாக தருமபுரி அருகே சோகத்தூர் கூட்டு ரோட்டில் உள்ள மெர்சி ஹோம் நிர்வாகி பாலச்சந்திரன் மற்றும் ஆயுதப் படை உதவி காவல் ஆய்வாளர் பிரபு, பாப்பாரப்பட்டி எஸ் பி சி ஐ டி தயாளன் ஆகியோர் முன் முயற்சியில் அரூர் எச்.அக்ரகாரம் அருகே உள்ள ஹோப் பவுண்டேஷன் என்ற விடுதியில் சேர்க்க ஏற்பாடு செய்தனர். சிட்லகாரம்பட்டியைச் சேர்ந்த ஒண்ணப்பகவுண்டன அள்ளி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சேதுமுருகன், மாக்கனூரைச் சேர்ந்த தன்னார்வலர் ஜெகன்நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பாரப்பட்டி பகுதி குழு செயலாளர் ஆர்.சின்னசாமி ஆகியோர் ஆதரவற்ற முதியவரைக் குளிப்பாட்டி புத்தாடைகள் அணிவித்து முதியவரை காரில் ஏற்றி விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் பிரபு அவர்கள் தனது வாகனத்தை கொடுத்து உதவினார். ஆதரவற்ற முதியவர் மீது அன்பு காட்டிய கருணை உள்ளம் கொண்ட இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.