சென்னை: அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் கண்ணா, வ/45, என்பவர் நெற்குன்றத்தில் National Institute of Hotel Management என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஸ்டாலின் கண்ணா 02.6.2021 அன்று மதியம் அவரது காரில் ஜெ.ஜெ.நகர், TVS காலனி, லோட்டஸ் ரெசிடென்சி அருகில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு சாலையில் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்று கிடந்ததை கண்டு எடுத்து பார்த்தபோது,
அதில் பணம் ரூ.50,000/- இருந்துள்ளது. பணத்திற்கு உரிமையாளர் யார் என தெரியாததால் ஸ்டாலின் கண்ணா அப்பணத்தை எடுத்துச் சென்று, V3 ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுபோல R1 மாம்பலம் காவல் நிலைய தலைமைக் காவலர் பிரேம்குமார் (த.கா.26385) என்பவர் 03.6.2021 அன்று அதிகாலை ரோந்து பணியில், தி.நகர் சாலையிலுள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ATM மையத்தில் தணிக்கை செய்ய சென்றபோது,
அங்கு கிடந்த ரூ.10,000/- பணத்தை எடுத்து விசாரணை செய்தபோது, யாரும் அப்பணத்திற்கு உரிமையாளர் யார் என தெரியவில்லை. ஆகவே, தலைமைக் காவலர் பிரேம்குமார் மேற்படி பணம் ரூ.10,000/-ஐ R1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
மேற்படி சம்பவங்களில் கீழே கிடந்த பணத்தை கண்டெடுத்து நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த அண்ணாநகரைச் சேர்ந்த ஸ்டாலின் கண்ணா மற்றும் R1 மாம்பலம் காவல் நிலைய தலைமைக் காவலர் பிரேம்குமார் ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 03.6.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
பணத்தை இழந்தவர்கள் உரிய சான்றுகளுடன் V3 ஜெ.ஜெ.நகர் மற்றும் R1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர்களிடம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.