நெல்லை : நெல்லை சந்திப்பு மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் ரஜினிமுருகன். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இவர் தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்கள் மகன் பைக் விபத்தில் காயமடைந்தார். இதனால் அவரது மருத்துவ செலவுக்கு ரஜினிமுருகன் பெரும் தொகையை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது ரஜினி முருகன் மிகவும் வறுமையில் வாடி வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் பணி நிமித்தமாக அவசரமாக சென்றபோது அவர் வைத்திருந்த ரூ. 2 லட்சம் கீழே விழுந்துவிட்டது.
இதனை கண்ட ரஜினி முருகன் மற்றும் அவரது மனைவி கோகிலா அந்த பணத்தை எடுத்துக்கொண்டு சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சமூக வலைதளம் மற்றும் நாளிதழ்கள் மூலமாக அறிந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் திரு.சரவணன் அவர்கள் வறுமையில் வாடினாலும் நேர்மையாக செயல்பட்ட ரஜினி முருகன் மற்றும் அவரது மனைவியை இன்று நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.