திருச்சி : திருச்சி புத்தகத்திருவிழா செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வருகிற 16-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தாங்கள் வாசித்த நல்ல நூல்களை நன்கொடையாக வழங்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புத்தக சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அவை சேகரிக்கப்பட்டு, கிராமப்புற நூலகங்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த புத்தக சுவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் பணத்தை சேமித்து புத்தகங்கள் வாங்கி படிக்க உண்டியல்களை அமைச்சர்கள் வழங்கியதுடன், புத்தக திருவிழா குறித்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை பஸ்களிலும், குடிநீர் கேன்களிலும் ஒட்டி விளம்பரப்படுத்தினர்.
அத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்திலும், புத்தக திருவிழாவிற்கான விளம்பரம் முத்திரையிடப்பட்டு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், காவல் ஆணையர்திரு.கார்த்திகேயன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரே பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் ஸ்ரீரங்கம் பூச்சந்தை பகுதியை பார்வையிட்டு பூச்சந்தை மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த சந்தை அமைத்தல் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டார்.