திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம்,சின்ன சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், கல்லிடை குறிச்சி,வீரவநல்லூர்,சேரன்மகாதேவி முக்கிய தாமிரபரணி ஆற்றங்கரையிலும் மற்றும் உவரி கடற்கரையிலும் முக்கிய புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன.
இந்த இடங்களில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் உள் மாவட்டம், வெளி மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக, மத்திய – மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருப்பதாலும், மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதாலும்,
ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் நோய்த் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதாலும், பொதுமக்கள் நலன் கருதி நாளை 08.08.2021-ம் தேதி ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் யாரும் திதி, தர்ப்பணம் கொடுப்பதற்கும் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதற்காகவும் ஆற்றங்கரை மற்றும் பிற கடற்கரையோர இடங்களிலும் சடங்குகள் செய்வதற்கும், மக்கள் கூடுவதற்கும் அனுமதி இல்லை.
எனவே, பொதுமக்கள் மேற்படி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை பின்பற்றி காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்.,IPS அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.