திண்டுக்கல்: உடல் நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணி பெண்கள், தனிமைப்படுத்தப்பட்டோர், வயதானோர் என வீடுகளில் இருப்பவர்கள் ஆக்ஸிஜன் அளவை கணக்கிடும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வைத்திருத்தல் நல்லது என டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதற்காக சமீபத்தில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனை பயன்படுத்தி சில கும்பல்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர். இணையதளத்தில் போலியாக ஆக்ஸிஜன் அளவை கண்டறியும் செயலி என விளம்பரம் செய்கின்றனர். இதனை பார்த்து சம்பந்தப்பட்ட செயலை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பொதுமக்கள் பணம், தகவல்களை பறிகொடுக்கின்றனர்.
அந்த போலி செயலியில் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க விரல்களை ஸ்கேன் செய்யும் போது அலைபேசியில் உள்ள தகவல்கள் திருடப்படுகிறது. அதோடு, செயலியை பயன்படுத்தும்போது வரும் ஓ.டி.பி., எண்ணை பதிவிடுதன் மூலமாக பணம் பறிகொடுத்தவர்களும் உள்ளனர். எனவே, நம்பகத்தன்மை இல்லாத எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.இவ்வாறு திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.