மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், அப்பன்திருப்பதி காவல் நிலைய சரகத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் ஆடி தேரோட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த வருட ஆடித்தேரோட்டம் (வருகிற (01.08.2023) -ம் தேதி) நடைபெறவுள்ளது. இதனால், அழகர் கோவில் தேரோட்டம் திருவிழாவிற்கு மதுரை, மேலூர் மற்றும் எம்.சத்திரப்பட்டி வழியாக ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அழகர்கோவிலுக்கு இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலம் வரவுள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(31.07.2023) -ம் தேதி இரவு 08.00 மணி முதல் (01.08.2023) -ம் தேதி இரவு 11.00 மணி வரை மட்டும் மதுரையிலிருந்து அழகர்கோவில் வழியாக மேலூர் செல்லும் பேருந்துகள் வலையபட்டி வழியாக மரக்காயர்புரம் சென்று பின்பு மேலூர் செல்லும் வகையிலும், மேலூரிலிருந்து அழகர்கோவில் வழியாக மதுரை செல்லும் பேருந்துகள் மரக்காயர்புரம் சென்று நாயக்கன்பட்டி வழியாகவும், மதுரைக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தேர் திருவிழாவிற்காக மேலூரிலிருந்து அழகர்கோவிலுக்கு 20 சிறப்பு பேருந்துகளும், மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அழகர் கோவிலுக்கு 30 சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சிறப்பு பேருந்துகளை பயன்படுத்துமாறு மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்