விருதுநகர் : விருதுநகர் வத்திராயிருப்பு,அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடம் மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊராட்சி மன்ற அலுவலகம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்டது இலந்தைகுளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த இரு அலுவலக கட்டிடங்கள் மிகவும் சேதம் அடைந்து இருப்பதால் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தைலாபுரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டுவதற்கு உண்டான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
பேச்சுவார்த்தை இலந்தைகுளம் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் எங்கள் ஊரை விட்டு வெளியில் கட்டக் கூடாது. புதிய கட்டிடம் இலந்தைகுளம் ஊராட்சியில், கட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம்பட்டி காவல்துறையினர் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் திரு. ஆறுமுகம், பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
                                











			
		    



