சென்னை : சென்னை அரும்பாக்கம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களை விசாரிக்க தனியாக அனைத்து மகளிர் காவல் நிலையம் இல்லாத காரணத்தால், அரும்பாக்கம் சரகத்தில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்க வேண்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. ஆ. அருண், இ.கா.ப அவர்கள் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் அரசுக்கு அனுப்பிய பரிந்துரையின் அடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பின்படி, தமிழக அரசால் (19.08.2025) அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. ஆ. அருண், இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, இன்று (05.02.2026) மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் திருமதி E.S. உமா, இ.கா.ப அவர்கள், அண்ணாநகர் துணை ஆணையாளர் திரு. R. உதயகுமார், இ.கா.ப மற்றும் அரும்பாக்கம் உதவி ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில், K-8 அரும்பாக்கம் காவல் நிலைய தரைதளத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள அரும்பாக்கம் சரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தை திறந்து வைத்தார். எனவே, இனி வரும் காலங்களில் K-8 அரும்பாக்கம் காவல் நிலையம் மற்றும் F-5 சூளைமேடு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களை அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பெறப்படும் புகார்கள் முறையாக விசாரிக்கப்பட்டு, சிறப்பான மற்றும் மேம்பட்ட முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















