தூத்துக்குடி: நந்தினி, க/பெ. சசிக்குமார், பெருந்துறை, ஈரோடு மாவட்டம் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரின் மூலம் பெருமாள், த/பெ. பலவேசம், ஆறுமுகநேரி, தூத்துக்குடி என்பவரிடம் அறிமுகமாகி செவிலியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 4,00,000/- பணத்தை கொடுத்துள்ளார்.
பின்னர் நந்தினி தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று பணத்தை திருப்பித்தருமாறு பெருமாளிடம் கேட்டதற்கு, அவர் பணத்தை திருப்பித்தரவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த நந்தினி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பெருமாள் என்பவர் நந்தியினிடம் பணத்தை வாங்கியதை ஒப்புக் கொண்டு, அதற்கான பணம் ரூபாய் 4 லட்சத்தை காசோலையாக ஒப்படைத்தார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து மேற்படி நந்தினி இன்று மாவட்ட காவல்துறை அலுவலகம் வரவழைக்கப்பட்டு சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நந்தினியிடம் காசோலையை வழங்கினார்.