தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பேருந்தில் தவறவிட்ட ரூபாய் 20,000/- பணத்தை நேர்மையுடன் எடுத்து காவல் நிலையம் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் அழைத்து அவர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாரட்டினார்.
கடந்த 07.01.2022 அன்று பாத்திமா, க/பெ. ராஜா, பாத்திமாநகர் தூத்துக்குடி என்பவர் தூத்துக்குடியிலிருந்து கோவங்காடு செல்ல அரசு பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் அந்த பேருந்து கோவங்காடு செல்லாது என அறிந்து முள்ளாக்காட்டில் இறங்கியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த மணிபர்ஸை பேருந்தில் தவறவிட்டுள்ளார்.
அதில் ரூபாய் 20,000/- பணம் வைத்திருந்துள்ளார். பேருந்தில் இருந்த மணிப்பர்ஸை பார்த்த அப்பேருந்து ஓட்டுநரான திரு.ஆறுமுகசாமி 42, த/பெ. பாண்டி, ஆசிரியர் காலனி, தூத்துக்குடி மற்றும் நடத்துநரான திரு.ஆதி அப்பாசி 40, த/பெ. ராமசாமி, முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி ஆகிய இருவரும் அதை எடுத்து நேர்மையுடன் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து முத்தையாபுரம் காவல் நிலைய எழுத்தர் தலைமை காவலர் திரு.சிவக்குமார் மற்றும் காவலர் திரு.பாலமுருகன் ஆகிய இருவரும் மணிபர்ஸின் உரிமையாளரை கண்டுபிடித்து, முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜெயசீலன் அவர்கள் மூலமாக அந்த மணிப்பர்ஸை, அதன் உரிமையாளரான பாத்திமா என்பவரிடம் ஒப்படைத்தார்.
மேற்படி மணிப்பர்ஸை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மேற்படி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் திரு.ஆறுமுகசாமி மற்றும் திரு.ஆதி அப்பாசி ஆகியோரை நேரில் அழைத்து, அவர்களை கௌரவித்து சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாரட்டினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.கோபி, பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கணேஷ்குமார் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பேச்சிமுத்து, உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.