திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் துணை மின் நிலைய வளாகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பொன்னேரி அனைத்து மின் ஊழியர்கள் சார்பில் சி.ஐ.டி.யு சென்னை வடக்கு திட்ட தலைவர் கதிரேசன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் கன்னியப்பன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டார் குப்பம் பிரிவு முகவர் முதல் நிலை முத்து வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆதித்தமிழர் கலைக்குழு சார்பில் பறையாட்டம் மற்றும் அம்பேத்கர் புகழ் பாடும் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற திறனறிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இதனை சென்னை வடக்கு தலைமை பொறியாளர் சகாயராஜ்,நிர்வாக அலுவலர் முரளி ஆகியோர் வழங்கினர். மேற்பார்வை பொறியாளர் ஜெயச்சந்திரன்,பொன்னேரி கோட்ட செயற்பொறியாளர் இரா. பாண்டியன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். டாக்டர் அம்பேத்கர் பணியாளர், பொறியாளர் சங்கத்தின் நிர்வாகி கோடீஸ்வரன் நன்றி உரையாற்றினார். இதில் ஏராளமான மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு