சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், பருவமழை காலத்தின் போது நீர்நிலைகளில் சிறிது உடைப்பு ஏற்பட்டாலும், அதனை உடனடியாக சரிசெய்திட வேண்டும். பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக அந்த இடத்திலிருந்து மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும் முதல்நிலை மீட்பாளர்களாக குறைந்தது 5 தன்னார்வலர்களை கண்டறிந்து அவர்களின் பட்டியலை வைத்திருக்க வேண்டும்.
மண்சுவர் வீடுகளில் தங்கியிருப்பவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும்.
நீர்வள ஆதார அமைப்பினர் நீர் செல்லும் பாதைகளுக்கு மேல் சாலை அமைத்திருந்தால் பாலங்களில் அடைப்பு இல்லாமல் இருப்பதை கண்காணித்திட வேண்டும். நீர்நிலைகளில் கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதென கண்டறியப்படும் கண்மாய்களில் மணல் மூட்டைகள், சவுக்கு மூட்டைகளை தேவையான அளவிற்கு வைத்துக் கொள்ள வேண்டும். சாலையில் ஏதேனும் சேதம் ஏற்படும் பட்சத்தில், அவற்றிற்கு மாற்று வழி செய்திட ஜே.சி.பி. மின்அறுவை இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் பணியாளர்களை நெடுஞ்சாலைத்துறையினர் தயாராக வைத்திருக்க வேண்டும். மீட்பு நடவடிக்கைக்கு தேவையான மின்னாக்கி, மரஅறுவை இயந்திரம், உயர்சக்தி மின்விளக்கு, தண்ணீர் இரைப்பான்கள் போன்றவற்றை தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தயார்நிலையில் இருக்க வேண்டும். கண்மாய்கள், ஊரணிகள் மற்றும் குளங்கள், வாய்க்கால்கள், பாலங்கள் போன்றவற்றை உள்ளாட்சித்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிக்கூடங்களில் மழைநீர் தேங்காதவாறும் ஏதேனும் பாதுகாப்பற்ற கட்டடங்கள் இருக்குமாயின் அவற்றில் யாரும் தங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில்,தேவையான அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்ய வேண்டும். நீர் தேங்கும் மற்றும் சுகாதார பாதிப்பு உள்ள இடங்களை கண்டறிந்து கிருமி நாசினி மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளித்திட வேண்டும்.
பழுதடைந்த மின்கம்பங்கள், சேதம் அடைந்த மின்கம்பங்கள் மற்றும் தாழ்வான நிலையில் தொங்கும் மின்கம்பங்களை சீர்செய்திட வேண்டும். மின்கம்பங்களை உரசிக்கொண்டிருக்கும் மரக்கிளைகளை அகற்றிட வேண்டும். கடந்தாண்டுகளில் மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, மீண்டும் அவ்வாறான சூழ்நிலை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வேளாண்மைத்துறையினர் மழையினால் ஏதேனும் பயிர்கள் சேதமடையும் பட்சத்தில் உடனடியாக பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கால்நடைப்பராமரிப்புத் துறையினர் 445 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி கால்நடைகள் பாதிப்படையாமல் பாதுகாத்திட தேவையான மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். சுகாதாரத்துறையினர் மழைக்காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு அனைத்துக் கிராமங்களிலும் நகரும் மருத்துவ முகாம்களை நடத்திட வேண்டும். தண்ணீர் மூலம் பரவும் டைபாய்டு, மலேரியா, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் பரவாமல் தடுத்திட கிருமிநாசினிகளை தெளித்திட வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு கட்டடங்களையும் ஆய்வு செய்து சேதமடைந்த கட்டிடங்களை கண்டறிந்து பழுது நீக்க வேண்டும்.
பேரூராட்சி மற்றும் நகராட்சித்துறையினர் சாலையில் விழும் மரங்களை உடனடியாக அகற்றிட தேவையான அளவு மரஅறுவை இயந்திரங்களையும், குடியிருப்புக்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றிட உயர்மின் மோட்டார்களையும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்களை தயார்நிலையில் வைத்திட வேண்டும். நிவாரண முகாம்களில் மின்வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சமையற்கூடம் போன்றவை சீரானநிலையில் உள்ளதா என ஆய்வு செய்து தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அலுவலர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு பொதுமக்கள் யாரும் தென்மேற்கு பருவமழையினால் பாதிப்பு அடையாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ,மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பசுமைக்குழுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
தமிழகத்தில் பசுமைப்போர்வையினை 33 சதவிகிதமாக உயர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவிகிதமாக பசுமைப்போர்வை உருவாக வேண்டுமானால் 49 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழலை மேம்படுத்திடவும் பசுமைப்போர்வையினை அதிகரிக்கவும் அரசுக்கு சொந்தமான இடங்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள், காவல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், சாலையோரங்கள் மற்றும் இதர இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட துறைகள் வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தன்னார்வ அமைப்புக்கள் மூலம் தேவையான மரக்கன்றுகளை பெற்று, நடவு செய்திட வேண்டும். அதன் விபரத்தினை தமிழ்நாடு பசுமை இயக்க இணையதளத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட இடம், எண்ணிக்கை போன்றவற்றை பதிவேற்றம் செய்திட வேண்டும்.
நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை பராமரிப்பு செய்திட கன்றுகள் நடவு செய்யப்பட்ட இடம், எண்ணிக்கை போன்ற தகவல்களுடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதி அலுவலகங்களுக்கு கடிதம் வாயிலாக தகவல் தெரிவித்திட வேண்டும். அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் தமிழகத்தினை வளமான சுகாதாரமான பாதுகாப்பான சுற்றுச்சூழல் உள்ள மாநிலமாக மாற்றிட ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
கூட்டங்களில், மாவட்ட வன அலுவலர் திருமதி பிரபா, மாவட்ட வருவாய் அலுவலர்
ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மு.காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சு.தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்ந.மங்களநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரத்தினவேல், உதவி ஆணையர் (கலால்) ம.ரா.கண்ணகி, மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, தாட்கோ மேலாளர் முத்துச்செல்வி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி