விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருவில்லிபுத்தூர் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்ட நக்சல் தடுப்பு அலுவல் பிரிவு சார்பாக, ராஜபாளையம் அருகேயுள்ள மேற்கு மலை தொடர்ச்சி பகுதியான, அய்யனார் கோவில் கிராம மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டது.
கிராம மலைவாழ் மக்கள் 30 குடும்பத்தினருக்கு அதிகாரிகள் பொருட்களை வழங்கினார்கள். மேலும் காட்டுப் பகுதிகளில், மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக, மாவோயிஸ்டுகள் மற்றும் அறிமுகம் இல்லாதவர்கள் நடமாட்டம் குறித்தும், தீவிரவாத குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மலைவாழ் மக்களுக்கு கொரோனா தொற்று பரவல் குறித்தும் விரிவான விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, காவல் ஆய்வாளர் ஜேசு, சார்பு ஆய்வாளர் அருண்குமார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.