விருதுநகர்: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாிகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி உதவிகள் செய்யுமாறு காவல்துறைக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் வலியுறுத்தி இருந்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில், ஊரடங்கு உத்தரவு காரணமாக ராஜபாளையம் பகுதியில் வேலை வாய்ப்பு இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகள் விவரம், ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய போலீசாரால் கண்டறியப்பட்டது.
இதன்படி ராஜபாளையம் நகர் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்து, ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.
முழுமையாக நடமாட முடியாத நிலைமையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் சிலரின் வீடுகளுக்கு நேரில் சென்று, நிவாரணப் பொருட்களை போலீசார் வழங்கினர். காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள், காவலர்கள் அனைவருக்கும் மனமார நன்றி தெரிவித்தனர்.