கடந்த ஜூலை 11ம் தேதி அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது, பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பன்னீர்செல்வம் – பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் போலீசார் உட்பட 47 பேர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
அலுவலகத்தில் இருந்த கோப்புகள் மற்றும் ஆவணங்களை பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் திருடி சென்றதாக போலீசில் புகார் கூறப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. விசாரணை அதிகாரியாக டி.எஸ்.டி., வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான குழுவில் இன்ஸ்பெக்டர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை சிபிசிஐடி போலீசார் பார்வையிட்டு வருகின்றனர்.
மோதல் தொடர்பாக விரைவில் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.