திருச்சி : திருச்சி மாநகரம் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பால்பண்ணை சந்திப்பில் முத்தூட் குழுமம், நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டம் மூலம் திருச்சி மாநகர காவல்துறைக்கு உயர்ரக கேமரா (ANPR) மற்றும் தரவு சேமிப்புகளை முத்தூட் குழுமம் வழங்கியது. இத்திட்டம் குற்றங்களை கண்காணிக்க உதவும் உயர்ரக கேமராக்கள் (ANPR) மூலம் பாதுகாப்பை மேம்படுத்தும் வாகனங்களின் எண் கண்டறிதல், வாகன சீர்அமைப்பு, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாக்கவும் இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது.
அதிநவீன உயர்ரக கேமராக்கள் – 2 (ANPR) உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட போக்குவரத்து மிகுந்த கரூர் பைபாஸ்ரோட்டில் பொருத்தப்பட்டு, அனைத்து வாகனங்களையும் தானியங்கியாக தணிக்கை செய்யவும், போக்குவரத்தை கண்காணிக்கவும் பயன்பாட்டிற்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த அதிநவீன உயர்ரக கேமராக்கள் (ANPR) இப்பகுதியில் நிறுவப்பட்டதினால், போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கவும், திருச்சி நகருக்குள் வரும் வாகனங்களையும், திருச்சியில் இருந்து வெளியேறும் வாகனங்களை தணிக்கை மேற்கொண்டு, குற்றங்களை முன்கூட்டியே தடுக்க ஏதுவாக அமைந்துள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் தெரிவித்து கொள்ளப்படுகிறது.