விருதுநகர் : விருதுநகர் திருச்சுழி, திருச்சுழி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு குழுக்கள் மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில், அதிக விபத்துக்கள் ஏற்படும் இடங்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் வருவாய்த்துறையினர், காவல் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் தன்னார்வ கல்லூரி மாணவர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்கள் நடைபெறும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
கள ஆய்வு இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் திருச்சுழி-அருப்புக்கோட்டை சாலையில் மேலகண்டமங்கலம் ஜெயவிலாஸ் மில் அருகே உள்ள பகுதியும், ஒத்த வீடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள பகுதியும் கண்டறியப்பட்டது. இதேபோன்று திருச்சுழி-நரிக்குடி சாலையில் உள்ள அணிக்கலக்கியேந்தல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பகுதி என மொத்தம் 3 இடங்கள் அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுக்குழுவில், திருச்சுழிகாவல்உதவி ஆய்வாளர் திரு. பால்பாண்டி, தலைமை ஏட்டு திரு. ஜெயமுருகன், நெடுஞ்சாலைதுறை சாலை ஆய்வாளர்கள் திருமதி.சுந்தரவல்லி, திரு.அழகுராஜா, திரு.முத்துசெல்வம் மற்றும் வருவாய்துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் சந்தனமாரி, ஆயிஷாபானு, பால்பாண்டி மற்றும் சவுடாம்பிகா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சேகர், மதுபாலன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த இடங்களில் இனிவரும் காலங்களில் விபத்துகள் ஏற்படாவண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.