இணையம் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சமயத்தில் இணையவழி குற்றங்கள் எனப்படும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது . இந்த சைபர் குற்றங்களில் இளைய தலைமுறைகள் மட்டுமல்லாமல் முதியவர்களும், அரசு அதிகாரிகளும் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
முன்பு பெரிய நகரங்களில் நிகழ்ந்து வந்த சைபர் குற்றங்கள் தற்போது தேனி போன்ற சிறு மாவட்டத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தினசரி பல்வேறு சைபர் குற்றங்கள் சம்பந்தமான வழக்குகளை பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் புதிய புதிய வழிகளில் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்படுவதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளரான அரங்கநாயகி கூறுகையில் , ” தேனி மாவட்டத்தில் அதிக அளவு சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்றாலும் அதில் குறிப்பாக கடன் செயலிகள் மூலமாகவும் , சமூக வலைதளங்களில் மூலமாகவும் , விளையாட்டு செயலிகள் , பொருட்கள் விற்பனை இணையதளம் மற்றும் செயல்கள் மூலமாக பொதுமக்கள் அதிக அளவிற்கு ஏமாற்றம் அடைகின்றனர்.
பொதுமக்கள் அவசர தேவைக்காக ஏதேனும் அங்கீகரிக்கப்படாத கடன் வழங்கும் செயலிகளிடமிருந்து கடன்களை பெற்று விடுகின்றனர் . கடன் செயலிகள் மூலம் கடன் பெறும் பொழுது ஸ்மார்ட் போனில் உள்ள தொடர்பு எண்கள், கேமரா, புகைப்படம் , லொகேஷன் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் அக்சஸ் செய்து கொள்கிறது கடன் செயலிகள்.
நிர்ணயிக்கப்பட்ட நாளுக்குள் கடனை திருப்பி செலுத்தாமல் விட்டாலோ அல்லது அவர்கள் நிர்ணயித்த வட்டித் தொகையை செலுத்த முடியாமல் தவறினாலோ, கடன் பெற்றவர்களின் புகைப்படங்களை அனைத்து தொடர்பு எங்களுக்கும் அனுப்பி , கடனை செலுத்த தவறி உள்ளார் என்ற தகவல்களை அனுப்பிவிடுவர். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் மனம் புண்படும்படி பணத்தை திரும்ப செலுத்தக் கூறி தொந்தரவு செய்வதால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களுக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து முன்பின் தெரியாத நண்பர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளும் பொழுது அவர்கள் மூலமாகவும் ஏமாற்றப்படுவது வாடிக்கையாக உள்ளது.
அதேபோல அரசு அதிகாரிகள் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படுவதும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தங்களது உயர் அதிகாரிகள் போலியாக சமூக வலைதள பக்கங்களில் கணக்கு தொடங்கி , தங்களது உயர் அதிகாரி போலவே மெசேஜ் செய்து குறிப்பிட பணத்தை அனுப்பி வைக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு கட்டளை இடுகின்றனர். அதனையும் நம்பி அரசு அதிகாரிகள் தங்களது உயர் அதிகாரிகள் பணம் கேட்பதாக நினைத்து உடனடியாக யுபிஐ மூலம் பணத்தையும் செலுத்தி விடுகின்றனர். ஒரு முறை யுபிஐ மூலம் பணம் செலுத்தி விட்டால் தொடர்ந்து அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு வருகிறது.
உடனே காவல்நிலையத்தில் புகார் அளியுங்கள்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் . ஸ்மார்ட் போனில் புதிய அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யும் போது ஒவ்வொரு செயல்பாடுகளையும் அக்சஸ் செய்ய அனுமதி கேட்கும் பொழுது கவனத்துடன் அனுமதி அளிக்க வேண்டியது அவசியம். சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அரசு உயர் அதிகாரிகளிடம் இருந்து உங்களிடம் பணமாகவோ அல்லது பொருளாகவோ ஏதேனும் கேட்டால் யாரும் நம்பி பணத்தை அனுப்ப வேண்டாம்.
பொதுமக்கள் இணைய வழி அல்லது சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் தயங்காமல் உடனடியாக 1930 என்ற எண்ணிய தொடர்பு கொண்டு சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான புகாரை அளிக்கலாம் என்றார்