வேகமாக வளர்ந்து வரும் நவீன மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத வியாதிகள் என்பதன் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது.எந்த விதமான நோயாக இருந்தாலும் அதன் அறிகுறியை கவனிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் முக்கியமான அறிகுறியாகும். மாரடைப்பு என்பது உயிரைக் கொல்லக்கூடியது என்ற எண்ணமே மனிதர்களை மிகவும் பதற்றமடையவும், அறிகுறிகளை கண்டுகொள்ள முடியாத அளவிற்கு அச்சத்தில் ஆழ்த்துவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆரம்ப அறிகுறி என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.. மாரடைப்பை பொறுத்தவரை அதிகப்படியாக வியர்ப்பது மாரடைப்பான மிக முக்கியமான ஆரம்ப கால அறிகுறியாக உள்ளது.
அதிக வியர்வைக்கான காரணம்?
வழக்கத்தை விட அதிகமாக வியர்ப்பதை பெண்கள் மெனோபஸ் என்றோ, ஆண்கள் உடற்பயிற்சி அல்லது வெயிலின் தாக்கம் என்றோ நினைப்பதால் மாரடைப்பு வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்வதில்லை. ஆனால் அதிகப்படியாக வியர்வை வெளியேற மிக முக்கியமான காரணம் மாரடைப்பு மட்டுமே என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிக வியர்வைக்கும், இதய பிரச்சனைகளுக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டறிவது எப்படி?
எந்தவித காரணமும் இல்லாமல் இயல்பாக இருக்கும் நேரத்தில் திடீரென வியர்த்துக் கொட்ட ஆரம்பிப்பது, இதயம் செயல்படுவதில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுவது ஆகும். மூச்சுத் திணறல், குமட்டல், சோர்வு மற்றும் மார்பு வலி, காய்ச்சல், இரவில் சரியான தூக்கமின்மை, காரமான உணவு உண்டதால் நொந்தரவு போன்ற அறிகுறிகளைப் போலவே அதிக அளவில் வியர்வை வெளியேறுவதும் மிக முக்கியமான காரணியாக உள்ளது.
பிரபல பின்னணி பாடகரான கே.கே. கொல்கத்தாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார். அப்போது அவரை கவனித்த ரசிகர்கள் பலரும் அதிகப்படியாக வியர்த்து கொட்டியதாக கூறினர். அப்போது அங்கு ஏசி வேலை செய்யவில்லை, அதனால் தான் அவருக்கு வியர்த்தது என காரணம் கூறப்பட்டாலும், சிறிது நேரம் ஏசி வேலை செய்யாததற்கு அதிக அளவில் வியர்வை வெளியேற வாய்ப்பில்லை என்றும், அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகவே பல மணி நேரம் முன்பே வியர்க்கத் தொடங்கியதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மார்புவலி ஏற்படுமா?
திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் காண்பிக்கப்படுவது போல் மாரடைப்பு வரும் போது மார்பு வலி ஏற்படுவது ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே காணப்படுவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல் மாரடைப்புக்கான அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும் என்றும், சிலருக்கு மார்பு வலி அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிகப்படியான வியர்வை இதய நோய்க்கான அறிகுறியா?
மாடைப்பு ஏற்படும் போது உடல் வியர்ப்பதற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் தெளிவாக விளக்கமளித்துள்ளனர். இதயம் சரியாகச் செயல்படாதபோது அல்லது மெதுவாகச் செயல்படும் போது, ரத்த ஓட்டத்தை எளிதாக்க உடல் கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தான் உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறுகிறது. எனவே தான் மாரடைப்பிற்கும் அதிகப்படியான வியர்வைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அதனை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாரடைப்பின் மற்ற அறிகுறிகள்:
மாரடைப்பின் போது, அதற்கு முன்பு அல்லது பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டை குறிப்பிட்ட நபர்கள் அனுபவிக்கக்கூடும்,
- நெஞ்சு வலி
- கை, தாடை மற்றும் கால்களில் வலி
- வயிற்று வலி அல்லது அஜீரணம்
- குமட்டல்
- மூச்சுத்திணறல்
- கணுக்கால்களில் வீக்கம்
- தீவிர சோர்வு
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆகியவை மாரடைப்பு ஏற்படுவதைக் குறிக்கும் பிற முக்கியமான அறிகுறிகள் ஆகும்
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா