திருச்சி : திருச்சியில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 104 வாகனங்கள் டிசம்பர் 6 ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது. வாங்க விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்யலாம் என மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 8 நான்கு சக்கர வாகனங்கள், 12 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 84 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 104 வாகனங்களை அரசுடமையாக்குவது தொடா்பான அறிவிப்பு கடந்த அக். 25 அம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அவற்றின் மீது இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. எனவே, திருச்சி, மாவட்ட வருவாய் அலுவலரால் 104 வாகனங்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் டிசம்பர் 6 ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள இந்த ஏலத்தில் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் ஏலம் நடக்கும் டிச. 6 காலை 8 முதல் 10 மணி வரை ரூ. 5 ஆயிரம் செலுத்தி தங்களுடைய பெயா் விலாசத்தை பதிய வேண்டும்.
அதைத் தொடா்ந்து முற்பகல் 11 மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும். ஏலம் எடுப்பவா்கள் தங்களுடைய குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை,ஓட்டுநா் உரிமம் மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையுடன் வரித் தொகையையும் சோ்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக் கொள்ளலாம் என காவல் ஆணையா் அ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி