சென்னை: மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர் ரவீந்திரன் (வயது 67). தற்போது பிரீலன்ஸ் பத்திரிகையாளராக எழுதிக் கொண்டிருக்கிறார். தன் ஓய்வு காலத்திற்காக இவர் சேமித்து வைத்திருந்த தொகையை ஒரு நூதன ஆசாமி ஏமாற்றி அபகரித்தார். அதை மீட்டுத் தரும்படி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் திரு.ஏ. கே. விஸ்வநாதனிடம் முறையிட்டிருந்தார்.
அப்புகாரில், வயதான காலத்தில் வாடகை வீடுகளில் மாறி, மாறி பெரும் சிரமத்தை சந்தித்து வந்ததால்” லீஸ் ஒப்பந்தம்” அடிப்படையில் வீடு தேடியுள்ளார். ஒரு புரோக்கர் மூலம் சென்னை, பள்ளிக்கரணை சுண்ணாம்புக் கொளத்தூரில் வசிக்கும் வி. சங்கர் என்பவர், தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பை, லீஸ் உடன்படிக்கை அடிப்படையில் தருவதாகச் சொல்லி, 7.50 லட்சத்தை கடந்த 19.06.2019 அன்று பெற்றுக்கொண்டுள்ளார்.
புரோக்கர் சொன்னபடி வீட்டையும் ஒப்படைக்காமல் வாங்கிய ஒரு 7.50 லட்சம் பணத்தையும் தராமல் அவரை ஆறு மாதம் அலைக்கழித்து ஏமாற்றி விட்டார். தற்போதைய மூத்த பத்திரிக்கையாளர் உடல் நிலை சரியில்லாமல் உள்ளார். சிகிச்சைக்கு பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக அப்புகாரில் கூறியுள்ளார்.
பறிபோன சேமிப்பு தொகையை மீட்டுத் தரும்படி காவல் ஆணையரிடம் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனு தொடர்பாக காவல் ஆணையர் திரு.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், பரங்கிமலை துணை ஆணையர் திரு.பிரபாகரன் விசாரணை நடத்தி முதல்கட்டமாக, ரூ 2 லட்சம் தொகையை சம்பந்தப்பட்ட நபரிடம் பெற்று, உடல் நலம் குன்றியிருக்கும் பத்திரிக்கையாளர் ரவீந்திரன் மனைவியிடம் இன்று ஒப்படைத்தார்.
மீதமுள்ள பணமும் விரைவில் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். காவல் ஆணையருக்கு மூத்த பத்திரிக்கையாளர் ரவீந்திரனின் குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை