கோவை: கோவையில் கோழிப்பண்ணை அமைப்பதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து 33 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் தனியார் வங்கியின் முன்னாள் மேலாளர் உட்பட நான்கு பேரை கோயம்புத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை – திருச்சி சாலையில் இயங்கி வரும் தனியார் வங்கியில் லட்சுமி பிரகாஷ் என்பவர் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
வங்கியின் முன்னாள் மேலாளரும் தூத்துக்குடி மாவட்ட திருத்தொண்டநல்லூரை சேர்ந்தவருமான சிவசுப்பிரமணியம் உட்பட 4 பேர் வங்கியில் 33 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தன. கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த மகேஷ், சூலூரை சேர்ந்த பாண்டியன், செலக்கரிச்சல் பகுதியை சேர்ந்த கோமதி ஆகியோர் கோழிப்பண்ணைகள் அமைக்க இருப்பதாகக் கூறி கோவை – திருச்சி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் நிலத்தின் பேரில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
அப்போது வங்கி மேலாளராக இருந்த சிவசுப்பிரமணியன் நிலத்தின் மதிப்பை உயர்த்தி காட்டி பல மடங்கு கடன் கொடுத்துள்ளார். இப்படியாக நான்கு பேரும் சேர்ந்து 33 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்தது உறுதியானது.
இதையடுத்து முன்னாள் வங்கி மேலாளர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்