சென்னை: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பச்சியப்பன் (வ/40) என்பவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். பச்சியப்பனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், 2020ம் ஆண்டு இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நேரத்தில் பச்சியப்பன் மறுமணத்திற்காக, இணையதளத்தில் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். இதனைக் கண்ட ஒரு நபர் பச்சியப்பனை தொடர்பு கொண்டு, எனது தங்கை ராஜேஸ்வரி என்பவர் விதவை எனவும், தங்களை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும் கூறி, ராஜேஸ்வரியின் புகைப்படத்தை பச்சியப்பனுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் பச்சியப்பனும் சம்மதித்து பச்சியப்பனும், ராஜேஸ்வரியும் செல்போனில் அடிக்கடி பேசி வந்த நிலையில், ராஜேஸ்வரி அடிக்கடி பணம் கேட்டதின்பேரில், பச்சியப்பன் ராஜேஸ்வரியின் வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக என ரூ.1,35,25,000/- பணம் அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 02.03.2022 அன்று இந்தியா வந்த பச்சியப்பன், சென்னை, மயிலாப்பூரிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருப்பதாகவும், தனக்கு பரிசு பொருள் வாங்கி வந்திருப்பதாகவும் ராஜேஸ்வரிக்கு தகவல் தெரிவித்ததின்பேரில், ராஜேஸ்வரியின் அண்ணன் மேற்படி ஓட்டலுக்கு சென்றபோது, ஏன் ராஜேஸ்வரி வரவில்லை, அவரை நேரில் பார்க்கதான் வந்தேன் என பச்சியப்பன் கேட்டபோது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ராஜேஸ்வரியின் அண்ணன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி, பச்சியப்பன் வீட்டிற்காக வாங்கி வைத்திருந்த சுமார் ரூ.3.6 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன், ஐபேட், லேப்டாப் உள்பட எலக்டிரானிக் பொருட்களை பறித்துக் கொண்டு மிரட்டிச் சென்றார்.
இதனால் பயந்துபோன பச்சியப்பன் அங்கிருந்து சென்ற பின்னர் மீண்டும் சென்னைக்கு வந்து மேற்படி சம்பவம் குறித்து, இராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இராயப்பேட்டை காவல் உதவி ஆணையர் திரு.லட்சுமணன் உத்தரவின் பேரில், இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.பசுபதி அவர்கள் தலைமையில் தலைமை காவலர்கள் திரு.சிவபாண்டியன்(HC26980 – 2003), திரு.ராஜேஷ்(HC36054 – 2003), முதல்நிலை காவலர் திரு பார்த்தீபன்(Gripc44515 – 2011) தலைமையிலான காவல் குழுவினர், தீவிர விசாரணை செய்து, ராஜேஸ்வரியின் அண்ணன் என்று கூறி பணம் மற்றும் பொருட்கள் பறித்துச் சென்ற செந்தில் (வ/42) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், செந்திலுக்கு சகோதரிகள் யாரும் இல்லை என்பதும், பச்சியப்பன், திருமண தகவல் இணையதளத்தில் விண்ணப்பித்திருந்ததை கண்ட செந்தில், மேற்படி பச்சியப்பனை தொடர்பு கொண்டு, தனக்கு ராஜேஸ்வரி என தங்கை உள்ளதாகவும், விதவையான அவர் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் பேசி, வேறொரு பெண்ணின் புகைப்படத்தை ராஜேஸ்வரியின் புகைப்படம் என அனுப்பியும், பின்னர், செல்போனில் உள்ள ஆண் குரலில் பேசினால், பெண் குரலுக்கு மாற்றம் செய்யும் செயலியை பயன்படுத்தி, செந்தில், ராஜேஸ்வரி போல பெண் குரலில் பச்சியப்பனிடம் பேசி வந்ததும், சிறிது சிறிதாக என ரூ.1,35,25,000/- பணம் பறித்ததும், சென்னைக்கு வந்த பச்சியப்பன் கோபத்தில் இதுவரையில் ராஜேஸ்வரியை காட்டாமல் ஏமாற்றுகிறாய் என கேட்டு, வாக்குவாதம் செய்தபோது, செந்தில் கத்தியைக் காட்டி மிரட்டி பச்சியப்பன் வைத்திருந்த பரிசு பொருட்களை அபகரித்துச் சென்றதும் தெரியவந்தது.
அதன்பேரில், இராயப்பேட்டை காவல் நிலையத்தில் மோசடி பிரிவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, எதிரி செந்தில் (வ/42) பெரம்பூர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 147 கிராம் தங்க நகைகள், பணம் ரூ.30,07,000/-, ஆப்பின் ஐபோன் உட்பட 4 செல்போன்கள், ஆப்பிள் ஐபேட், லேப்டாப் உள்ளிட்ட எலக்டிரானிக் பொருட்கள் மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்