ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்துார் பகுதிகளில் மாந்திரீகம் என்ற பெயரில், பூமிக்கடியில் தங்க சிலைகள் உள்ளதாகவும், யாக பூஜை நடத்தினால் பழமையான சிலைகள் எடுக்கலாம் என, ஒரு கும்பல் மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனடிப்படையில், கமுதி வட்டம் பேரையூர் அருகே ஆனையூரில், கடந்த சில வாரங்களுக்கு முன் யாகபூஜை நடத்தினர். அப்போது தங்க சிலைகளுக்கு பதிலாக, பழமையான சிலைகள் கிடைத்தன.
பழமையான சிலைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என திட்டமிட்ட கும்பல், கமுதி அருகே தோப்படைபட்டியில் பூமிக்கடியில் பதுக்கி வைத்து, விற்பனை செய்ய காத்திருந்தனர். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. வருண்குமார் அவரது பிரத்யேக அலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி கண்காணிப்பாளர் த விவேக், முதுகுளத்தூர் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ், கமுதி துணை கண்காணிப்பாளர். திரு. மகேந்திரன் அவர்கள் , ராமநாதபுரம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர். திரு. திவாகர் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் , விசாரணை மேற்கொண்டனர். இதில், தோப்படைபட்டியில் பூமிக்கடியில் பதுக்கி வைத்திருந்த 6 சிலைக, யாக பூஜையில் பயன்படுத்தப்படும் நாணயங்கள், மாந்திரீகம் செய்த தகடுகள், மிளிரும் அலங்கார கற்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முதுகுளத்தூர் செல்வக்குமார், தோப்படைபட்டியை சேர்ந்த புதுக்கோட்டை விஏஓ., செல்லப்பாண்டி, முருகராஜ், ஏனாதியைச் சேர்ந்த முத்து, கீழகாஞ்சிரங்குளம் ஓய்வு தலையாரி மகாதேவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகளை தனிப்படையினர் தேடுகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்