தூத்துக்குடி : போலீஸ் நண்பர்கள் குழுவின் ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று (14.03.2020) தூத்துக்குடி ரயில் நிலையம் எதிர்புரம் உள்ள ராஜம் மஹாலில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் இந்த போலீஸ் நண்பர்கள் குழு 1994ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டது. போலீஸ் நண்பர்கள் குழு காவல்துறையுடன் இணைந்து செயல்படுவதால் காவல் நிலைய பணிகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறி பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் ஒரு பாலமாக செயல்படும்.
பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக காவலர்கள் நியமிக்க முடியாது. காவல் பணி என்பது குற்றங்கள் நடவாமல் தடுப்பது மற்றும் நடந்த குற்ற சம்பவங்களை புலன் விசாரணை செய்து, குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதாகும்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவலர்களுக்கு பல்வேறு பணிகள் ஒதுக்கப்படுகிறது. அவ்வாறாக காவல் பணி அதிகமாக இருக்கும் சூழ்நிலைகளில் இரவு ரோந்து பணிக்கு ஒரு காவலருடன், அவருக்கு உதவியாக போலீஸ் நண்பர்கள் குழுவினர் இணைந்து செல்லுதல், போக்குவரத்து சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஒரே இடத்தில் ஓய்வில்லாமல் நின்று கொண்டு தொடர்ந்து நான்கு, ஐந்து மணி நேரம் பணியாற்றும்போது அவர்களுக்கு உதவியாக பணியாற்றுவது, திருவிழாக்காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் காவல்துறைக்கு உதவியாக இந்த காவல் நண்பர்கள் குழுவினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மேலும் இந்த நண்பர்கள் குழு, அவர்கள் வசிக்கும் பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால், அதனை அச்சமின்றி காவல்துறையினரிடம் தெரிவிக்க உதவுவதும், மீண்டும் அத்தகைய குற்ற சம்வங்கள் நடைபெறாமல் தடுப்பதுமே காவல் நண்பர்கள் குழுவின் முக்கியப்பணி எனவும், இங்கு காவல் நண்பர்கள் குழுவின் பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் பயிற்சிகள் நடைபெறும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழச்சியில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், காமராஜ் கல்லூரி பேராசிரியர் திரு. தேவராஜ், காவல் ஆய்வாளர்கள் தென்பாகம் திரு. கிருஷ்ணகுமார், முத்தையாபுரம் திரு. அன்னராஜ், வடபாகம் குற்றப்பிரிவு திருமதி. பிரபாவதி, தாளமுத்து நகர் பொறுப்பு திருமதி. பிரேமா ஸ்டாலின் தெர்மல் நகர் திருமதி. கோகிலா உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் சுமார் 170 காவல் நண்பர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி