திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியான புதிய ராணுவ சாலை, காமராஜர் நகர், திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பு, வைஷ்ணவி நகர் ஆகிய பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் பைக்கில் வந்த நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டார். செயின் பறிப்பு தொடர்பாக காவல்நிலையங்களில் புகார்கள் குவிந்தன. இதனையடுத்து தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில், 4 இடங்களிலும் வழிப்பறியில் ஈடுபட்டது ஒரே நபர்தான் என்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் தொடர் விசாரணையில், வழிப்பறி செய்த ஆவடி, நந்தவன மேட்டூர், வ.உ.சி தெருவை சேர்ந்த சதீஷ் (32) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் செயின் பறித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் சதீஷ் 2013ல் இளைஞர் காவல் படையில் சேர்ந்துள்ளார். பின்னர் 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆவடியில் உள்ள 3ம் அணியில் சேர்ந்து பணிபுரிந்தார். அப்போது அவர், திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு அதே குடியிப்பில் வசிக்கும் சக காவலர் கோவிந்தராஜ் என்பவரிடம் கடனுக்கு பணம் கேட்டுள்ளார்.
ஆனால் கோவிந்தராஜ் மனைவி கோமளா (21) சதீஷீக்கு பணம் கொடுக்க கூடாது எனக் கூறியுள்ளார். இதனை கோவிந்தராஜ், சதீஷிடம் கூறியதால் ஆத்திரம் அடைந்த சதீஷ், கோமளாவை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். இதுதொடர்பாக திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் பின்னர், சதீஷ் காவல் துறை பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பின்னர் அவர் ஆவடி, திருமுல்லைவாயில் பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார் என போலீசார் கூறினர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்