சென்னை: தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர், காமராஜர் தெருவில் வசித்து வரும் திருமதி.சகுர்பானு, வ/45, க/பெ.அப்துல்ரகீம் என்பவர் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வார்டு உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் தரமணி பகுதியில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள வேளச்சேரி தரமணி 100 அடி சாலை, கட்டபொம்மன் தெரு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரமான காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 07.00 மணி வரை என இருவேளைகளில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வேளச்சேரி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வருகிறார். இதன் பயனாக மேற்படி இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்து சீராக செல்கிறது. மேலும் பெண்மணி சகுர்பானு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது வாகன ஓட்டிகள் முழுவதுமாக ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.
தன்னார்வலராக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் பெண்மணி சகுர்பானுவை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 11.12.2019 நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை