சேலம்: சேலம் ரயில்வே உட்கோட்டத்தில் ஓராண்டில் ரயிலில் சிக்கி 350 பேர் உயிரிழந்துள்ளனர். முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரித்தால், இந்த உயிரிழப்பு குறையும் என போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். நாடு முழுவதும் ரயில்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகாரித்து வருகிறது.
ரயிலில் இருந்து தவறி விழுதல், தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்துச் செல்தல், தண்டவாள பகுதியை கழிவறையாக பயன்படுத்துதல், தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்தல் போன்ற காரணங்களால், ரயிலில் சிக்கி உயிரை விடுகின்றனர். இம்மாதிரி உயிரிழப்பை தடுக்க அனைத்து மாநில ரயில்வே போலீசாரும், பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சாவு எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
தமிழகத்தை பொருத்தளவில் ஓராண்டில் சுமார் 3 ஆயிரம் பேர் ரயிலில் சிக்கி பலியாகி வருகின்றனர். சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, ஓசூர், ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில்வே போலீஸ் எல்லை பகுதியில் மட்டும் கடந்த ஆண்டு (2019), 350 பேர் ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதுவே முந்தைய ஆண்டான 2018ல் 315 ஆக இருந்தது. கடந்த ஆண்டில், 35 பேர் கூடுதலாக உயிரிழந்திருக்கிறார்கள். பயணிகள் மற்றும் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் எத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ரயில்வே தண்டவாளத்தில் உயிரிழந்து கிடக்கும் நபர்களில் பெரும்பாலானவர்கள், ஏதாவது ஒரு ரயிலில் பயணம் செய்யும்போது, படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர்களாக இருக்கின்றனர். 100க்கு 60 சதவீத பேர், இத்தகைய முறையில் தங்களது உயிரை விடுகின்றனர்.
40 சதவீத பேர், கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும்போதும், தண்டவாளத்தை கழிவறையாக பயன்படுத்தும்போதும், தற்கொலை செய்யும் நோக்கில் தண்டவாளத்தில் படுப்பதாலும் ரயில்களில் சிக்கி இறக்கின்றனர்.
இந்த உயிரிழப்பை குறைக்க நாடு முழுவதும் முக்கிய ஊர்களுக்கு இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ், மெயில், சூப்பர் பாஸ்ட் உள்ளிட்ட அனைத்து வகை ரயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
ஒவ்வொரு ரயிலிலும் 3 அல்லது 4 முன்பதிவில்லா பெட்டிகள் மட்டும் இருப்பதால், அந்த பெட்டிகளில் அளவுக்கு அதிகமாக தொங்கிக் கொண்டும், படிக்கட்டில் அமர்ந்து கொண்டும் பயணிகள் பயணிக்க வேண்டியிருக்கிறது.
அப்படி, கூட்ட நெரிசலில் பயணிக்கும்போது தான், ரயிலில் இருந்து தவறி விழுந்து இறக்கின்றனர். இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “ரயில் விபத்து உயிரிழப்புகளை குறைக்க முன்பதிவில்லா பெட்டிகள் எண்ணிக்கையை அதிகாரிக்க வேண்டும். மேலும், அனைத்து ரயிலிலும் முன்பதிவில்லா பெட்டி உள்பட அனைத்து பெட்டிக்கும் தானியங்கி கதவுகள் ஏற்படுத்த வேண்டும். ரயில்வே ஸ்டேஷனை விட்டு ரயில் புறப்பட்டதும், அனைத்து பெட்டிகளின் கதவுகளும் தானாக மூட வேண்டும்.
அப்படிபட்ட பெட்டிகள் வந்தால் தான், தவறி விழுந்து இறக்கும் சம்பவங்களை தடுக்க இயலும். அதேபோல் சிலர், செல்போனில் டவர் கிடைக்கவில்லை என்பதற்காக படிக்கட்டிற்கு வந்து நின்று பேசி உயிரை விடுகின்றனர். இதனால், பயணிகள் கவனமாக பயணிக்க வேண்டும். அதுதொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்,’’ என்றனர்.